நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் கொலை… தூத்துக்குடியில் பரபரப்பு!!!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மேலமங்களகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் துரைமுத்து. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரில் வசித்து வந்தார். 2018ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரலில் இளைஞர்கள் இருவரை இரட்டைக் கொலை செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் துரைமுத்து. 2019 ஆம் ஆண்டு நெல்லை பேட்டையில் மீண்டும் ஒரு கொலை வழக்கில் சிக்கினார். 10க்கும் மேற்பட்ட கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கைதாகி சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்துள்ளார் துரைமுத்து. வல்லநாடு அருகில் உள்ள மனக்கறை காட்டுப்பகுதியில் உள்ள கோவில் அருகே வனத்துறைக்கு சொந்தமான சமூக காடுகள் பகுதி உள்ளது. அதில் வனத்துறைக்கு சொந்தமான ஒரு அறையும் உள்ளது. அந்த அறையில் வனத்துறைக்கு தெரியாமல் கூட்டாளிகள் சிலரோடு துரைமுத்து தங்கியிருந்துள்ளார்.
அங்கிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து அடுத்த கொலை சம்பவத்துக்கு துரைமுத்து தயாராகி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் அவரை பிடிக்க மனக்கறை காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். போலீசார் வாகனத்தை பார்த்த துரைமுத்துவும் அவரது கூட்டாளிகளும், கொலை திட்டத்திற்காக தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை அவர்கள் மீது வீச முயன்றுள்ளனர். அப்போது தனிப்படையில் இருந்த காவலர் சுப்ரமணியன் ஓடி வெடிகுண்டை வீச விடாமல் தடுத்துள்ளார்.
இதனால் துரைமுத்து அந்த நாட்டு வெடிகுண்டை சுப்ரமணியன் மீது வீசியுள்ளார். இதில் சுப்ரமணியனுக்கு படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துரைமுத்துவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. வீசாமல் கையில் வைத்திருந்த மற்றொரு குண்டை அங்கிருந்த போலீசார் மீது வீச முயன்றபோது அது கையிலேயே வெடித்துள்ளது. இதில் துரைமுத்துவும் படுகாயமடைந்துள்ளார். துரைமுத்துவை மீட்டு நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், உயிரிழந்த சுப்ரமணியன் உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துரைமுத்துவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவலர் சுப்ரமணியன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.