துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் திடீர் அனுமதி: முதல்வர் நலம் விசாரிப்பு
சென்னை: முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை, சூளைமேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையொன்றில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலையை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்ததில், துணை முதல்வருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் திங்கள்கிழமை இரவு வீடு திரும்பினார்.
முன்னதாக, மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த துணை முதல்வரைச் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் மருத்துவக் குழுவினரிடம் பன்னீர்செல்வத்தின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதனிடையே, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முழு உடல் பரிசோதனைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 24) மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவக் குழுவினர் அவரது உடல் நிலையைப் பரிசோதித்தனர். அதில் அவர் நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.