திமுகவை இந்து விரோதமாக சித்தரிக்கும் முயற்சி – எம்.கே.ஸ்டாலின் குற்றச்சாட்டு..
திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”திருவாரூர் கோயில் தேரோட்டம், மயிலாப்பூர் கோயில் தெப்பக் குளம் தூர்வாருதல் என தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோயிலின் திருப்பணியிலும் கவனம் செலுத்தி, கவனிப்பாரற்று இருந்த கோயில்களில் ஒரு கால பூஜையேனும் நடத்த திமுக ஆட்சி காலத்தில் வழிவகுக்கப்பட்டதாகக்” குறிப்பிட்டுள்ளார்.
”எந்த மதத்தின் மீதும் திமுகவுக்கு வெறுப்பு கிடையாது, எவரது நம்பிக்கையிலும் பழக்கவழங்கங்களிலும் குறுக்கிடுவதில்லை என்ற நிலையில், இந்து விரோதிகள் என்று விமர்சனத்தை வைத்து வளர்ச்சியை தடுத்து விடலாம் என அரதப் பழசான சிந்தனையை புதிய தொழில்நுட்பங்களின் வழியே புத்தம் புதிய காப்பியாக ரிலீஸ் செய்ய முயற்சி நடப்பதாக சாடியுள்ளார்.பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் இத்தகைய சதிவேலைகளை செய்தபடியே, பெரும்பான்மை இந்து மக்களின் எதிர்கால வெளிச்சத்தை இருட்டாக்கிடும் வகையில் ஓபிசி பிரிவுனருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்திடும் வேலை நடப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
எங்கோ, எதுவோ ஒன்று நடந்தாலும் அதனை தொடர்புபடுத்தி திமுக மீது பழிசுமத்திட சிலர் ஆள்பிடித்து வைத்திருப்பதாக சாடியுள்ள ஸ்டாலின், சதிகாரர்களின் சமூக வலைதள வலைகளில் சிக்கி நேரத்தை வீணடித்திட வேண்டாம்” என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.