திமுகவில் ஏற்பட்ட உட்கட்சியின் பூசலினால் ஏற்பட்ட மனஅழுத்தத்தினால், அதிகளவிலான தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு எம்எல்ஏ பூங்கோதை தற்கொலைக்கு முயன்றதாக வெளியாகிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் இருக்கும் ஒருசில பெண் எம்எல்ஏக்களில் முக்கியமானவர் பூங்கோதை ஆலடி அருணா. இவர் கருணாநிதியின் ஆட்சிகாலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது, எம்எல்ஏவாக இருந்து வரும் அவர், திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், திமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் உச்சம் அடைந்ததால், அதிகளவிலான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபனுக்கும், இவருக்கும் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், சீவலப்பேரி பாண்டியன் என்பவர் எம்எல்ஏ பூங்கோதையை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. மேலும், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவதில், குடும்ப உறுப்பினர்களிடையே போட்டி எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஏற்பட்ட மன விரக்தியால், நேற்றிரவு தூங்கச் செல்வதற்கு முன்னதாக, அதிகளவிலான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு படுத்துள்ளார். இன்று நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர், அவரது அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவர் மயங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் முக்கிய நிர்வாகியும், எம்எல்ஏவுமான ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு உட்கட்சி பூசல் திளைத்து வருவது அக்கட்சியினரின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.