தமிழகத்தில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் மற்றும் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால் மார்ச் 24ம் தேதியே அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.
சட்டப்பேரவை விதிகளின்படி வரும் செப்டம்பர் மாதம் 24ம் தேதிக்குள் குளிர்கால கூட்டத்தொடரைக் கூட்டுவது பற்றியும், தற்போது கொரோனா பரவலின் காரணமாக சட்டப்பேரவைக்குள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது சாத்தியமில்லை என்பதால், மாற்று இடத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரைக் கூட்டலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பும் 6 முறை தமிழக சட்டப்பேரவை மாற்று இடங்களில் நடைபெற்றுள்ளன.
தற்போது இருக்கும் சட்டமன்றம் சிறிய அளவிலானது என்பதால், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத சுழல் நிலவுகிறது. எனவே இந்த மாதம் இறுதிக்குள் ஆலோசனை நடத்தி மாற்று இடத்தைத் தேர்வு செய்ய சட்டப்பேரவை செயலகமும், தமிழக அரசும் முடிவெடுத்துள்ளன. சென்னையில் மாற்று இடமாக சேப்பாக்கத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கம் அல்லது சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தில் சட்டப்பேரவை கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.