தமிழகத்தில் 3,501 நகரும் ரேஷன் கடைகள் இன்று துவக்கம்…
தமிழகத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் 33,000 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. தற்போது, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், சில மலை கிராமங்களில், 43 நகரும் ரேஷன் கடை எனப்படும் வேன்கள் வாயிலாக, கார்டுதாரரின் வீடுகளுக்கு அருகில் சென்று, பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.இதேபோல, தங்கள் தொகுதியிலும், நகரும் ரேஷன் கடைகளை செயல்படுத்துமாறு, எம்.எல்.ஏ.,க்கள் பலர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும், 3,501 நகரும் ரேஷன் கடைகளை துவக்க, கூட்டுறவு துறை முடிவு செய்தது.
இதற்கான அறிவிப்பை, சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச்சில் அறிவித்தார். அத்திட்டத்திற்கு அனுமதி அளித்து, 9.66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஆகஸ்டில் அரசு உத்தரவிட்டது. இதன்படி நகரும் ரேஷன் கடை திட்டத்தை, முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார். புதிதாக துவக்கப்பட உள்ள நகரும் கடைகள் வாயிலாக, 5 லட்சத்து,36,000 கார்டுதாரர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கு அருகில் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.