காமன் டின்சில் ( common tinsel ) என்ற அரியவகை பட்டாம்பூச்சி முதல்முறையாக தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படும் கவனத்தில் பாதியளவு கூட கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படுவதில்லை என்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.
ஒடிஷாவில் தொடங்கி, ஆந்திர பிரதேசம், தமிழகத்தில் சேலம், பழனி வரை நீண்டுள்ளது கிழக்கு தொடர்ச்சி மலை. இங்குள்ள வனப்பகுதிகளில் காணப்படும் புதிய பூச்சிகள், பறவைகள், விலங்குகள் பற்றிய விழிப்புணர்வை கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்படுத்திவருகிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.
பொதுவாக டின்சில் பட்டாம்பூச்சி, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்தான் தென்படும். சேலம் வனப்பகுதியில் இந்த பட்டாம்பூச்சி இருப்பதால், இங்குள்ள வனப்பகுதி வளமுடன் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. நீலன்கள்(Blue family) குடும்பத்தைச் சேர்ந்த இந்த டின்சில் பட்டாம்பூச்சியின் மேல்புறம் நீலவண்ணமும், அடிப்பகுதி சாம்பல் நிறத்திலும் காணப்படும்.
காமன் டின்சில் சேலத்தில் காணப்பட்டதற்கு வேறு காரணங்கள் உள்ளனவா என கேட்டபோது, ”இதுநாள் வரை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகமாகக் காணப்பட்ட ஓர் உயிரி முதல்முறையாக தமிழகத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையில் தென்படுகிறது என்பதால், இங்குள்ள வனப்பகுதி ஆரோக்கியமாக உள்ளது என்பதை உணர்த்தும் அடையாளமாக இந்த பட்டாம்பூச்சியை கருதலாம்.
சேலம் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்(protected areas) இல்லை. ஆனாலும் இதுபேன்ற புதிய உயிரிகள், பலவிதமான உயிரிகள் இருப்பதை தொடர்ந்து ஆதாரங்களுடன் பதிவு செய்தால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை சேலம் வனப்பகுதிகளுக்கும் கிடைக்கும். பாதுகாப்பிற்காக புதிய திட்டங்களை கொண்டுவர இந்த ஆய்வு உதவும்,” என்றார் பெரியசாமி.