தஞ்சை அருகே சூறைக்காற்றால் சாய்ந்த வாழை மரங்கள்… விவசாயிகள் வேதனை!
தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழை பயிரை விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் சாகுபடி செய்துள்ளனர். குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் கல்லணை முதல் கும்பகோணம் வரை காவிரி கரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பரப்பளவில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாரான குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் கபிஸ்தலம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் அங்கு பயிரிடப்பட்ட வாழைமரங்கள் வேரோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி நமச்சிவாயம் கூறுகையில், வாழை விவசாயிகள் கடந்த மூன்றாண்டுகளாக மிகப்பெரிய இழப்பை சந்தித்து, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். முதலில் கஜாபுயலால் பாதிக்கபட்டதாகவும், கொரோனா தடை உத்தரவால் வாழைதார்களை வாங்க ஆளில்லாமல் காக்கைகளும், குருவிகளும் தின்று, மண்ணோடு மக்கி போனது. தற்போது அறுவடை செய்யலாம் என்று நம்பிக்கையோடு இருந்த வேளையில் இரண்டு நாட்கள் வீசிய காற்றால் இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் அளவில் வாழை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்த்து விட்டன, வாழை இலைகள் முற்றிலும் கிழிந்துவிட்டதாகவும், வாழைத்தார்கள் அனைத்தும் மண்ணில் விழுந்து பாழாகிப்போய் விட்டதாகவும், இனிமேல் இதனை ஒன்றுமே செய்ய முடியாது என வேதனை தெரிவிக்கிறார்.
இதுவரை ஒரு லட்சம் செலவும் வரை செலவு செய்த சாகுபடியால் ஒரு ரூபாய் கூட வருமானம் பார்க்காமல், மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாகவும், இதை சுத்தம் செய்வதற்கு மேற்கொண்டு 50,000 வரை செலவு ஏற்படும் என கண்ணீர் சிந்துகிறார்.வட்டிக்கு பணம் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் வாழை சாகுபடி செய்தோம், எனவே தமிழக அரசு வாழை விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.