டெங்குவையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறதா?
சென்னை நங்கநல்லூரில் டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை உயிரிழந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்த சென்னை மாநகரம் தற்போது படிப்படியாக மீண்டு வருவது ஓரளவு ஆறுதல் அளித்துக் கொண்டிருக்கையில், அடுத்த சிக்கலாக டெங்கு நோய் பரவத் தொடங்கியுள்ளது.
மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் மழைக்கால நோய்களில் ஒன்றாக டெங்கு பரவ தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் நேற்று, முதல் டெங்கு மரணம் பதிவாகியுள்ளது. நங்கநல்லூரைச் சேர்ந்த 3 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார். குழந்தை மரணம் தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்டதற்கு, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், திட்டமிட்டபடி தடுப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
கொரோனா பரவல் நடவடிக்கையுடன் சேர்த்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது சென்னை மாநகராட்சி. கொரோனா தடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்கையில், டெங்கு தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வீடுகளுக்கு அருகில் உள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருத்தல், பழைய பொருட்களை அகற்றுவது தொடர்பாகவும் ஆய்வு செய்து வருகின்றனர்.