சுரேஷ் ரெய்னாவின் உருக்கமான ட்விட்டர் பதிவு!
தனது மாமா உள்ளிட்ட உறவினர்கள் இருவரை கொடூரமாகக் கொன்ற குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா பஞ்சாப் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் ஐபில் தொடர்பில் பங்கேற்பதற்காக சென்றிருந்த சென்னை அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா திடீரென நாடு திரும்பினார்.
பஞ்சாப்பில் வசிக்கும் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதால் அவர் நாடு திரும்பியதாகக் கூறப்பட்டாலும், சென்னை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே தொடரில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் கருத்து தெரிவித்திருந்தார். வீரர்கள் சில நேரம் வெற்றியால் தலைக்கனத்துடன் செயல்படுவதாகவும், ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகுவதால் இழக்கப் போகும் பணம் குறித்து புரிந்து கொள்வார் என்றும் சீனிவாசன் தெரிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்பதியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சுரேஷ் ரெய்னா தனது டிவிட்டர் பக்கத்தில், பஞ்சாப்பில் தனது குடும்பத்திற்கு நிகழ்ந்தது கொடூரத்திற்கும் அப்பாற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். தனது மாமா கொள்ளையர்களால் கொல்லப்பட்டதாகவும், அத்தை உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், அதில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். அத்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிர்காக்கும் உபகரணங்களுடன் சிகிச்சை பெற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று வரை இந்த கொடூரத்தை செய்தது யார் என தெரியவில்லை எனக் கூறியுள்ள ரெய்னா, இந்த விவகாரத்தை பஞ்சாப் போலீசார் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த குற்றத்தை செய்தவர்கள் மேலும் குற்றங்கள் செய்யாமல் தடுக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்குக்கு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.இதற்கிடையே, சுரேஷ் ரெய்னா பற்றி தாம் கூறிய கருத்து தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். ரெய்னா சிஎஸ்கே அணிக்காக இதுவரை அளித்த பங்களிப்பு அளிப்பரியது என்றும் ரெய்னாவின் தற்போதைய மனநிலையை புரிந்து கொண்டு அவருக்கு உறுதுணையாக அணி நிர்வாகம் நிற்கும் என்றும் கூறியுள்ளார்.