சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் அறிவிப்பு..!
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவரும் நிலையில், வரும் 7-ம் தேதி முதல் ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 9 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. சென்னையில் காலை 6.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மதியம் 2.05 மணிக்கு கோவையை சென்றடையும். மறுமார்க்கத்தில் மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இதேபோல, கோவையில் காலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 1.50 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும். பின்னர் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணியளவில் கோவையை சென்றுசேரும்.
சென்னை-கோவை இடையே இரவு நேர சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. சென்னையில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 6 மணிக்கு கோவையை சென்றடையும். அன்றைய தினம் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு காலை 6.35 மணிக்கு வந்துசேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு காலை 8 மணிக்கு ரயில் புறப்படும். மாலை 4 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும் இந்த ரயில், மறுமார்க்கத்தில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.50 மணிக்கு வந்தடையும்.கோவை-மயிலாடுதுறை இடையே வியாழக்கிழமையைத் தவிர மற்ற நாட்களில் ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடி, மதுரை, தூத்துக்குடிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.10-க்கு காரைக்காலை சென்றடைந்து, அங்கிருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு நண்பகல் 12.10 மணிக்கு வந்துசேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எழும்பூரிலிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 9.15 மணிக்கு மதுரையைச் சென்றடையும். பின்னர் காலை 7 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.35 மணிக்கு எழும்பூரை வந்தடைய உள்ளது.இதேபோல, இரவு 7.35 மணிக்கு எழும்பூரிலிருந்து கிளம்பும் ரயில், காலை 6.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். மறுமார்க்கத்தில் இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35-க்கு சென்னை எழும்பூரை வந்தடைய உள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் பரிசோதிக்கப்பட்டு, அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.டிக்கெட் உறுதிசெய்யப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதனால், முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கான பெட்டி இருக்காது. ரயில் நிலையத்துக்குள் நுழையும்போதும், பயணத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயம். 90 நிமிடங்கள் முன்னதாகவே ரயில் நிலையத்துக்கு வந்துசேர வேண்டும்.ரயிலில் போர்வை, தலையணை உள்ளிட்டவை வழங்கப்பட மாட்டாது. குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் வெப்பநிலை தேவையான அளவுக்கு ஒழுங்குபடுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.