தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையின் போது ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்பட 10 போலீசார் கைது செய்யபட்ட நிலையில், வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ஏற்கனவே உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசுப் பணிக்கான பணி நியமன ஆணையை ஜெயராஜின் மூத்த மகளும் பென்னிக்ஸின் சகோதரியுமான பெர்ஸிஸ்க்கு சென்னை தலைமை செயலகத்தில் நேரில் முதலமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பென்னிக்ஸின் சகோதரி பெர்ஸிஸ், தந்தை, மற்றும் சகோதரன் இறந்தது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், அந்த வேதனையை போக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த பணி நியமன ஆணைக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.
மேலும், வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிய தமிழக அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மேலும் தனது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த கொலை சம்பவத்திற்கு துரித விசாரணை நடத்தி தண்டனை வாங்கி தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பெர்ஸிஸ்க்கு தென்காசி மாவட்டத்தில் வருவாய் துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.