சென்னை: சமையல் எண்ணெயை ஜூன் 1-ம் தேதி முதல் பாக்கெட்களில் மட்டுமே விற்க வேண்டும் என்றும், சில்லறையாக விற்க கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமையல் எண்ணெயில் கலப்படம் தொடர்பான புகார்கள் உணவு பாதுகாப்புத் துறைக்கு குவிந்ததால் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது தமிழக அரசு. தற்போது கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் உள்ள ஆயில் ஸ்டோர்களில் சமையல் எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள் தேவைப்படுவோருக்கு சில்லறையாக விற்கபடுகின்றன.
ஒரு லிட்டர் எண்ணெய் வாங்க முடியாதோர் தங்கள் பாத்திரத்தை எடுத்து சென்று 200 மி.லி., 300 மி.லி. என்று தங்கள் வசதிக்கேற்றவாறு ஆயில் ஸ்டோர்களிலும், மளிகைக்கடைகளிலும் எண்ணெய் வாங்கி செல்வார்கள். இப்போது இந்த நடைமுறை ஜூன் 1-ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இதற்கு எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.