கோவையில் ஆலைகளை திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் தர்ணா…
கோவையில் தேசிய பஞ்சாலை கழகத்தின் ஆலைகளை திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆலைகளின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமாக நாடு முழுவதும் 23 பஞ்சாலைகள் உள்ளது. தமிழகத்தில் கோவையில் 5 ஆலைகளும் கமுதகுடி, காளையார் கோவில் ஆகிய இடங்களில் தலா ஒரு ஆலை என 7 பஞ்சாலைகள் இயங்கி வருகின்றது.இவற்றில் ஆலைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்த ஆலைகள் மூடப்பட்டது. ஆலை நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு முழுச்சம்பளமும், தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே கொடுக்கபட்டு வருகின்றது.
இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பஞ்சாலைகளை முழுமையாக இயக்கிட வேண்டும், தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் உள்ள 5 பஞ்சாலைகள் முன்பும் தொழிலாளர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசு உடனடியாக ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் அடுத்த கட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர். இதேபோன்று தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சாலைகள் முன்பாகவும் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.