கோயம்பேடு சந்தை இன்று திறப்பு..!
கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் 5-ஆம் தேதி முதல் சென்னை கோயம்பேடு சந்தை முழுவதுமாக மூடப்பட்டது. இதில், காய்கறி, பழம், பூ ஆகிய விற்பனைக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டது. ஆனால் உணவு தானியம் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனைக்கு வேறு இடம் எதுவும் ஒதுக்கி கொடுக்கப்படவில்லை. இதனால், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மளிகைக் கடைகள் பூட்டியே இருந்தன.இந்நிலையில், கோயம்பேடு பல்பொருள் அங்காடி சந்தையில் முதல் கட்டமாக இன்று மளிகைக் கடைகள் மட்டும் திறக்கப்படுகின்றன.
இருப்பினும், இதுவரை மூடப்பட்டிருந்த கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் வீணானதாகவும், ஒவ்வோர் கடைக்கும் 6 முதல் 12 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், கடையை திறக்க அரசு அனுமதி அளித்தது மகிழ்ச்சயளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
கோயம்பேடு சந்தையில் உள்ள உணவுத் தானியக் கடைகள் திறக்கப்படுவதை ஒட்டி, கடைகளை சீரமைக்கும் இறுதிக்கட்டப் பணிகளில் வியாபாரிகள் தீவிரமாக இறங்கினர். மேலும், கொரோனா ஊரடங்களால் கடைகள் அடைக்கப்பட்டதன் விளையாக ஏற்பட்ட இழப்பை நினைத்து வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.
அத்துடன், இனிமேல் அதைவிட பலமடங்கு வியாபாரம் செய்து ஜெயித்துக் காட்டுவோம் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கோயம்பேடு உணவு தானிய சந்தையில் 290 கடைகள் இருக்கின்றன. இவற்றில் நாளை முதல் மளிகை பொருள் விற்பனை களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவுத் தானிய கடைகளை தொடர்ந்து வருகின்ற 28-ம் தேதி மொத்த வியாபார காய்கறி சந்தை திறக்கப்படவுள்ளது.