கொரோனா நோயாளிக்கு வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர் சாதனை!
இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் அமெரிக்காவில் கொரோனா பாதித்த இளம்பெண்ணுக்கு வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்காவில் கொரோனாவால் அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிகாகோவில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவரான அன்கித் பரத் என்பவர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு பிறகு நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்ட முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இது என்பது குறிப்பிடத்தக்கது.
சிகாகோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது பெண்ணுக்கு இரண்டு நுரையீரல்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அவர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மூளைச்சாவு அடைந்த ஒருவரது நுரையீரல்களை அந்த இளம்பெண்ணுக்கு மாற்றியுள்ளனர். இதுவரை தான் செய்த அறுவை சிகிச்சைகளிலே கொரோனா நோயாளிக்கு மேற்கொண்ட சிகிச்சைதான் மிகவும் சிரமமானதாக இருந்ததாக மீரட் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் பரத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் அவர்கள் உயிர் பிழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 20 வயது பெண்ணுக்கு நுரையீரல்கள் செயலிழந்தால் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் இதயத்தின் செயல்பாடும் குறைந்தது. இறுதியில் அவருக்கு வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு இதுபோன்ற சிகிச்சைகள் இனி அடிக்கடி நடக்க வாய்ப்புள்ளது’ என கூறியுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வது தொழில்நுட்ப ரீதியிலாக சவாலாக இருந்தாலும், இதனை பாதுகாப்பாக, வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என அனைத்து மருத்துவர்களும் நம்பிக்கை வைக்க வேண்டும். இதன் மூலம் நோயாளிகளுக்கு வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கான மன உறுதி கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.