கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஒருவருக்கு ஒருவர் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள ஆக்கசிறந்த அத்தனை வழிமுறைகளையும் மக்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் கடந்த மாதம் கேரளாவில் உள்ள நியாயவிலை கடை ஒன்றில் பெரிய பிவிசி குழாய் ஒன்றை பொருத்தி அதன் மூலம் அரிசி விநியோகம் செய்யப்பட்டது. இப்போது மத்தியப்பிரதேச மாநிலம் போபால், இந்தூர், உள்ளிட்ட பகுதிகளில் பால்காரர்கள் பால் விநியோகிக்க சில புதுமையான உத்திகளை கையாண்டு வருகின்றனர்.
பால் கேன்களுடன் ஒன்றரை இஞ்ச் குழாயை இணைத்து அதில் புணல் மூலம் பாலை ஊற்றி வருகின்றனர். இது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் தெரிந்தாலும் சமூக விலகலின் அவசியம் இதன் மூலம் உணர்த்தப்படுகிறது. பால்காரர்களின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பாத்திரங்களை குழாய்க்கு அடியில் பிடித்து பாலை பெற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறு பால் விநியோகம் செய்வதன் மூலம் நுகர்வோருக்கும் தங்களுக்கும் குறைந்தது 5 அடி இடைவெளி ஏற்படுவதாகவும், இதன் மூலம் அச்சமின்றி தங்களால் பால்வியாபாரத்தை மேற்கொள்ள முடிவதாகவும் கூறுகின்றர் இந்தூர் நகர பால் வியாபாரிகள்.