அடுத்து என்ன நடக்குமோ என அமெரிக்க மக்கள் ஒவ்வொரு நாளும் பதறி கொண்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உலகம் இதுவரை பார்த்திராத ஒரு பேரழிவை தற்போது சந்தித்துள்ளது என்று கூறும் அளவிற்கு, 210 நாடுகளில் கொரோனா தனது கோர ஆட்டத்தை ஆடி வருகிறது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள். உலக அளவில் இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 969 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை தற்போது பதிவாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் நம்பிக்கையையும், பெரும் நிம்மதியையும் அளித்துள்ளது. தினமும் 2 ஆயிரம் உயிரிழப்புகளை சந்தித்துவந்த அமெரிக்காவில், தற்போது வைரசின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. நேற்று அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து வந்த உயிரிழப்புகள் தற்போது குறைந்துள்ளது புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக அமெரிக்க மக்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இருப்பினும் அரசு இன்னும் தீவிர நடவடிக்கை எடுத்து கொரோனாவை முற்றிலும் ஒழித்த பின்பு தான், ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை தளர்த்த வேண்டும் என்பது அந்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 9 லட்சத்து 87 ஆயிரத்து 160 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.