குட்கா விவகாரம் – இடைக்கால தடை
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எளிதில் கிடைப்பதாக கூறி கடந்த 2017 ஆம் ஆண்டு குட்கா பொருட்களை சட்டமன்றத்தில் காண்பித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து, ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி, நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டது. இருப்பினும், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாக கருதினால், மீண்டும் நோட்டீஸ் அனுப்பி, திமுக எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, கடந்த 7ஆம் தேதி கூடிய உரிமைக் குழு, ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க கோரியும், நோட்டீசை ரத்து செய்யக் கோரியும் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்த போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், தடை செய்யப்பட்ட குட்காவை சபையில் காண்பித்தது உரிமை மீறிய செயல் என கூறி நடவடிக்கை எடுத்தது தவறு எனக் கூறிய தலைமை நீதிபதி அமர்வு, தடையை மீறி குட்கா வைத்திருந்தால் கூட அதை குற்ற வழக்காக நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டுமே தவிர, உரிமை மீறல் பிரச்னை எழுப்பக் கூடாது எனக் கூறியுள்ளதாக வாதிட்டனர்.
குட்கா பொருட்களுக்கான தடையை அமல்படுத்த வேண்டும் என்றுதான் அதை சபையில் காட்டியதாகயும், சபையில் அவற்றை காண்பித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் தலைமை நீதிபதி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.மேலும், உரிமைக் குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏற்கனவே ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதால், அவர் பாரபட்சத்துடன் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், புதிய நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், குழு தலைவருக்கோ, உறுப்பினருக்கோ தனிப்பட்ட பாரபட்சமாக நோட்டீஸ் அனுப்பி இருந்தால், அதுகுறித்து, குழுவிலேயே ஆட்சேபம் தெரிவிக்கலாம் எனவும், புதிய நோட்டீசுக்கு பதிலளிக்க செப்டம்பர் 24-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சபாநாயகர் தாமாக முன் வந்து பிர்ச்னையை உரிமைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார். உரிமைக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சட்டமன்றம்தான் முடிவெடுக்கும் எனவும், தலைமை நீதிபதி அமர்வு சுட்டிக்காட்டிய அடிப்படை தவறுகள் நீக்கப்பட்டு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நோட்டீஸ், சபாநாயகரின் அனுமதியின்றி தடை செய்யப்பட்ட குட்காவை காட்டியதற்காகவே அனுப்பப்பட்டுள்ளது என்றார்.தற்போது நோட்டீஸ் நிலையிலேயே உள்ளதால், அதற்கு தடை விதிக்க கூடாது எனவும், நாளையோ, அடுத்த வாரமோ சட்டமன்றம் கூட்டப்பட்டு, உத்தரவு பிறப்பிக்கும் நிலை இல்லை எனத் தெரிவித்த அவர், நோட்டீசுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும், குழு விசாரானையில் கலந்து கொள்ளட்டும் என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குட்காவை காண்பித்தது உரிமை மீறல் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்ததை சுட்டிக்காட்டி 18 எம்.எல்.ஏ’க்களுக்கும் அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார்.