கடலரிப்பு தடுப்புத் திட்டம் தாமதம் ஏன்?
தமிழக கடலோரப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்க விரிவான கடற்கரை பாதுகாப்பு மேலாண்மை திட்டம் ஒன்றை தமிழ்நாடு சுற்றுச் சூழல் துறை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை 1,076 கி.மீ நீள கடற்கரை உள்ளது. இப்பகுதிகளில் சரக்கு மற்றும் மீன்பிடி துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் ஆகியவற்றால் கடலோரங்களில் இயற்கையாக மணல் இடம் பெயர்வதில் பாதிப்பு ஏற்பட்டு கடல் அரிப்பு ஏற்படுகின்றன. இதனால் கடலோரப் பகுதியில் வாழும் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் கடல் அரிப்பைத் தடுத்து மீனவர்களின் குடியிருப்புகளை பாதுகாக்க பொதுப்பணித்துறை சார்பில் கடல் அரிப்பு தடுப்பான் கள் அமைப்பது, சுவர்களை எழுப்புவது, கற்களை கொட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தடுப்புகள் ஏற்படுத்தப்பட்ட பகுதியில் கடலரிப்பு இல்லாவிட்டாலும், பிற பகுதிகளில் கடல் அரிப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன. தமிழக அரசு கடலரிப்பைத் தடுப்பதாக கூறி அறிவியல் பூர்வ ஆய்வுகளை மேற்கொள்ளாமல் ஆங்காங்கே பெரும் பாறைகளை கொட்டி கடலரிப்புத் தடுப்பான்களை அமைத்து வருவதாலும் தொடர்ந்து தமிழகக் கடற்கரையோரம் கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்கக்கோரி தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் ‘விரிவான கடற்கரை பாதுகாப்பு மேலாண்மை திட்டம்’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்று, சுற்றுச்சூழல்துறை தமிழக அரசுக்கு உத்தர விட்டிருந்தது.
இத்திட்டத்தை உருவாக்கும் பணியானது சென்னை ஐ.ஐ.டிக்கு வழங்கப்பட்டது. மாவட்ட வாரியாக கடல் அரிப்பு ஏற்படும் இடங்களை 73 பகுதிகளாக பிரித்து அதை தடுக்கும் வழிமுறைகள், கடல் அரிப்பால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கி வரைவு திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு, பொதுப்பணித்துறை, மீன்வளத் துறை, வனத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் கருத்தைப் பெற்று மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்திற்கு தமிழக அரசு அனுப்பியிருந்தது.
இதனை பரிசீலித்த சுற்றுச்சூழல் துறை தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, புதுச்சேரி, கேரளாவிடம் கருத்து பெற வேண்டும் என மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் தற்போது வரை அண்டை மாநிலங்கள் கருத்து கூறவில்லை என்பதால் வரைவு அறிக்கைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.ஆனால் அண்டை மாநிலங்கள் கருத்து அவசியம் என்பதால் தமிழ்நாட்டின் விரிவான கடற்கரை பாதுகாப்பு மேலாண்மை திட்டத்திற்கு வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அண்டை மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது.