எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணம்…
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் 1954ம் ஆண்டு பிறந்த எடப்பாடி பழனிசாமி, விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மீது தீராத பற்று கொண்ட அவர், தமது 17வது வயதில் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்கினார். பின்னர் அதிமுகவில் இணைந்த எடப்பாடி பழனிசாமி, கட்சிக்காக அயராது உழைத்தார்.இதன் பிரதிபலனாக 18 வயதில், சிலுவம்பாளையம் அதிமுக கிளை செயலாளர் பதவி அவரை தேடி வந்தது. 21வது வயதில் கல்லூரி படிப்பை முடித்த அவர், வெல்லம் விற்பனையை தொடங்கினார். கட்சியில் தொடர்ந்து பணியாற்றிய பழனிசாமி, 1982ல் எடப்பாடி ஒன்றிய அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1985ம் ஆண்டு சேலத்தில் ஜெயலலிதா பேரவையை தொடங்கிய நிலையில், 1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக ஜெ., அணி சார்பாக சேவல் சின்னத்தில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று, 35 வயதில் முதல்முறையாக சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தார்.1990ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால், சேலம் வடக்கு மாவட்டத்தின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மீண்டும் எடப்பாடி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். 1998ம் ஆண்டு திருச்செங்கோடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.
கட்சியில் ஒவ்வொரு பொறுப்பாக தேடி வந்த நிலையில், 2001ம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு, சேலம் மாவட்ட செயலாளர் பதவியும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.1998ம் ஆண்டில் இருந்து 2010ம் ஆண்டு வரை, அரசியலில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த அவர், 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், எடப்பாடி தொகுதியில் வாகை சூடினார். அதுமட்டுமில்லாமல் சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்ததால், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குக்கு உரியவரானார்.இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அமைச்சராக பொறுப்பேற்றார்.
ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்கள் மாற்றப்பட்டு கொண்டே இருந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான பழனிசாமியின் இலாகாவில் மாற்றம் செய்யப்படவில்லை. பொதுப்பணித்துறையையும் கூடுதலாக கவனித்தார் எடப்பாடி பழனிசாமி. ஒரு கட்டத்தில் கட்சியின் வருவாயை எடப்பாடி பழனிசாமி கவனித்து வந்த நிலையில், 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, 2017 பிப்ரவரியில் சசிகலா சிறைசெல்ல, எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக முதலமைச்சராக அரியணை ஏறினார். 2017ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று முதலமைச்சர் பதவியை தக்க வைத்தார்.