“எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன் இருக்கிறது” – பி.சி ஸ்ரீராம்
உங்களின் தங்கக்குரல் எங்களுடன் வாழ்வுடனே இருந்திருக்கிறது.. நீங்கள் எங்களுக்கு வேண்டும் . எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன் இருக்கிறது என்று பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பிசிஸ்ரீராம் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைத்து வருவதாகவும், பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் உதவியுடன் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அவர் எழுந்து அமர்ந்திருந்ததாகவும் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி எஸ்.பி.பி.சரண் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை எஸ்.பி.பி.உடல்நிலை குறித்து விடுத்திருக்கும் அறிக்கையில், கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலம் குறித்து குடும்பத்தினருடன் பேச, கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேற்று சென்றிருந்தார். இதன்பின் அவரது உடல்நலம் தொடர்பாக கூறுகையில், எஸ்.பி.பி அவர்களின் உடல்நிலை உயிர் காக்கும் கவிருகள் இயங்கி கொண்டுள்ளது. அவர்கள் நம்பும் இறைவனை வேண்டி கொண்டிருக்கிறார்கள். நலமாக இருக்கிறார் என்று சொல்லமுடியாது கவலைக்கிடமாக உள்ளார்“ என்று தெரிவித்தார்.