திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உலகிலேயே முதல் முறையாகப் பேசும் புத்தகம் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், படிப்பறிவு இல்லாதவர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளி போன்றோருக்கு உதவும் வகையில் இந்தப் புத்தகம் கொண்டு வரப்பட்டு உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நேற்று திருப்பதி தேவஸ்தான தலைவர் ஸ்ரீ ஒய்.வி.சுப்பா ரெட்டி பேசும் புத்தகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மேலும் இந்தப் புத்தக விற்பனையை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இந்தப் புத்தகங்களுடன் ஒரு மொபைல் வடிவிலான எலக்ட்ரானிக் ரீடர் ஒன்றும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ரீடரை புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தில் வைத்து ஸ்கேன் செய்தால் மட்டும் போதும். அந்தப் பக்கத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் ஆடியோவாக கேட்க முடியும்.
டெல்லி ஹோயோமா நிறுவனத்துடன் இணைந்து திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான கமிட்டி இத்திட்டத்தை உலகிலேயே முதல் முறையாக அமல்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த ரீடரில் மொழி மாற்றம் செய்யும் வசதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் முதற்கட்டமாக பகவத்கீதை, ஹனுமன் சலிசா ஆகிய புத்தகங்களை பேசு புத்தகங்களாக மாற்றி உள்ளனர்.
இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் கேட்கும் இந்தப் பேசும் புத்தகங்கள் பக்தர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தக் கருத்துகளை தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், அசாம், நேபாளி, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் மொழிமாற்றத்துடன் கேட்டு ஆன்மீகத்தை அனுபவிக்க முடியும்.