அங்கொட லொக்கா கொலை.
இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா, கோவையில் காதலியால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மதுரையில் எரிக்கப்பட்டது. இந்த வழக்கில் லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இரண்டு நாட்களாக சிவகாமி சுந்தரி வீட்டில் சோதனை நடைபெறுகிறது. இன்றைய சோதனையின் போது, அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த அங்கொட லொக்காவின் போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதுமட்டுமின்றி துபாயில் இருந்து சிவகாம சுந்தரிக்கு பணப்பரிமாற்றம் நடந்ததற்கான வங்கி புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன. அங்கொட லொக்கா மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளான இருவர், சிவகாம சுந்தரியின் வீட்டு அருகே, மாடி வீட்டில் குடியிருந்ததும், போலியான பதிவெண் கொண்ட வெள்ளைநிற ஸ்கார்பியோ கார் ஒன்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடையே அங்கொட லொக்கா மரணம் தொடர்பாக இந்திய உளவு அமைப்பான “ரா” பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள், கோவையில் சிபிசிஐடி-யிடம் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில், சிவகாமிசுந்தரியின் ஏழு வங்கி கணக்குகளுக்கு, சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கொட லொக்கா கோவையில் உயிரிழந்ததை உறுதிபடுத்துவதற்கான சோதனைகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இண்டர்போல் அமைப்பு, 2019-ம் ஆண்டு அவர் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.