’ஜகமே தந்திரம்’ படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை!
இன்று தமிழ் சினிமாவில் அதிகம் உச்சரிக்கப்படும் மூன்றெழுத்து ஓடிடி. சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் அடுத்து இன்னும் என்னென்ன பெரிய படங்கள் இந்த வரிசையில் இணையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதில் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதல்முறை இணைவதால் இப்படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதை உறுதிபடுத்தும் விதமாக மோஷன் போஸ்டர், சிங்கிள் டிராக் என இப்படத்தின் அத்தனை முன்னோட்டங்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.
கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்த நிலையில், இப்படத்தை மே 1ம் தேதி திரைக்கு கொண்டுவரப் போவதாக படக்குழு அறிவித்தது. ஆனால் அதற்குள் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியதால் படக்குழு செய்வதறியாது திகைத்தது. இந்த சூழலில்தான் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் படத்தரப்பை அணுகி 40 கோடி வரை கொடுத்து இப்படத்தைக் கைப்பற்ற விருப்பம் தெரிவித்துள்ளது. தனுஷின் கேரியரில் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகியுள்ள படம் ஜகமே தந்திரம்தான். கிட்டத்தட்ட 65 கோடி பொருட்செலவில் இப்படம் தயாராகியுள்ளது. எனினும் தொலைக்காட்சி உரிமம், இந்தி டப்பிங் உரிமம் போன்றவை இன்னும் விற்கப்படாததால் நெட்பிளிக்ஸின் 40 கோடி ரூபாய் சலுகைக்கு தயாரிப்பு தரப்பும் செவி சாய்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மேலும் இப்படம் ஓடிடி-யில் நேரடியாக வெளியாவதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தனுஷ் கூறிவிட்டதால் தமிழில் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் அடுத்த பெரிய படமாக ஜகமே தந்திரம் இருக்கும் என பலராலும் கருதப்படுகிறது.இதுபோக ஜெயம் ரவியின் பூமி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் என படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் மற்ற முன்னணி நடிகர்களின் படங்களையும் ஓடிடி நிறுவனங்கள் குறிவைத்திருப்பதாகவும் தமிழகத்தில் கொரோனா சூழல் இப்படியே தொடர்ந்தால் அடுத்தடுத்து பல பெரிய படங்கள் இதேபோல் ஓடிடி-யில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.