கொரோனா ஊரடங்கிற்கு பின் விபத்துகள் உயர்வு…
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சாலை விபத்துக்களில் சிக்கிய 120 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்தில் 70 பேருக்கும் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை சராசரியாக சாலை விபத்துக்களில் சிக்கிய 30 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊரடங்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் 130 பேரும் செப்டம்பர் மாதத்தில் 145 பேரும் சாலை விபத்துகளில் சிக்கி சிகிச்சைக்கு ஆளாகியுள்ளனர். ஊரடங்குக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கையை விட தற்போது நிகழும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளன.
ஊரடங்கு காலத்தில் சாலை விதிகளை பின்பற்றாமல் வேகமாக ஓட்டி பழகியவர்கள் தற்போதும் அதே போன்று விதிகளை பின்பற்றாமல் தாறுமாறாக ஓட்டுவதால் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன என்று தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை மையம் மருத்துவர் துரை கூறுகின்றார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் அரசு மருத்துவமனையிலும் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலையில் ஏற்படும் பலத்த காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் நரம்பியல் துறையில் ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு பேருக்கு அறுவை சிகிச்சை செய்வதாக நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் கூறுகிறார். ஊரடங்கு காலத்தில் ஒரு மாதத்துக்கு சுமார் 30 அறுவை சிகிச்சைகள் செய்து வந்த நிலையில் தற்போது 80க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் செய்வதாக கூறுகிறார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாவிட்டாலும் சாலை விபத்துகளில் அதிகம் சிக்குவது இளைஞர்களாகவே இருக்கிறார்கள் என திருவள்ளுவன், நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் தெரிவிக்கிறார்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்துக்கு சராசரியாக 60 முதல் 70 சாலை விபத்து நோயாளிகள் வருவார்கள். ஊரடங்கு காலத்தில் 30 ஆக குறைந்தது. தற்போது மீண்டும் 70 பேர் சாலை விபத்தில் சிக்குவது வழக்கமாகி விடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.