6000 கோடி தொகையை வழங்கவேண்டும் – இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் கோரிக்கை…
சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கொரோனா பாதிப்பின் காரணமாக கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ள நிலையில் அதனை மீட்டெடுக்கும் வகையில் கட்டுமான சங்கங்கள் சார்பில் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.அதன் அடிப்படையில், முத்திரை வரி மற்றும் பத்திரப்பதிவு கட்டணத்தை 11% -இல் இருந்து குறைத்து, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ளதைப்போல் 4% சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும், சொத்து வரி குடிநீர் மற்றும் கழிவுநீர் வரிகளை குறைத்து வசூலிக்க வேண்டும்.
தமிழகத்தில் சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி’யில் தானியங்கி முறையின் மூலமாக கட்டட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.இந்திய அளவில், கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை 7 லட்சம் கோடி ரூபாய் உள்ளதாக தெரிவித்த அவர்கள், தமிழகத்தில் மட்டும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 6,000 கோடி என்றும் அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.