கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே 4-ம் தேதிக்கு பிறகு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.இதையடுத்து மாநில அரசுகள் மதுக்கடைகளைத் திறந்துள்ளது. மதுக்கடைகளுக்கு படையெடுக்கும் கூட்டம் காரணமாக, சமூக இடைவெளி காற்றில் பறந்தது. ஆன்லைனில் மதுவிற்பனை செய்வது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்றுமுன்தினம் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்நிலையில், ‘மதுக்கடைகளுக்காக போலீஸாரின் வாழ்க்கையுடன் விளையாட முடியாது’ என டெல்லி காவல் ஆணையர் கூறியுள்ளார்.
தி எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு டெல்லி காவல் ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா பேட்டியளித்துள்ளார். “அனைத்து காவலர்களின் உடல்நலனும் எனக்கு மிகவும் முக்கியம். தினசரி நடக்கும் கூட்டத்தில் இதுதொடர்பாக நாங்கள் தொடர்ந்து விவாதித்துக்கொண்டேதான் இருக்கிறோம். காவலர் குடியிருப்புகள் தொடர்ந்து தூய்மைப்படுத்தப்பட்டு, கிருமிநாசிகள் தெளிக்கப்படுகின்றன.
அனைத்து காவல் நிலையங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது காவல் நிலையங்களுக்கு தீடீர் விசிட் அடித்து, எவ்வாறு இருக்கிறது என்பதை ஆய்வு செய்கிறேன். காவலர்கள் யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால், மூத்த அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் உடல்நலனில் அக்கறைகொள்வதும் அவர்களை ஊக்கப்படுத்துவதும் முக்கியமான ஒன்றாகும்.
காவலர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு ஏற்றவாறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. க்ளவுஸ், மாஸ்க் மற்றும் பாதுகாப்புக் கவசங்களையும் வழங்குகிறோம். காவலர்களுக்காக தண்ணீர், சானிடைஸர்கள் மற்றும் ஓய்வு வசதிகளுடன்கூடிய சிறிய டென்ட் அமைக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 பாதிக்கப்பட்ட காவலர்கள் மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தின் நல்வாழ்வின்மீது அக்கறை கொண்டுள்ளோம். ஷாலிமார் பாக் பகுதியில், காவல் துறையினருக்கான பிரத்யேக சோதனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1000 காவல் துறையினரை தனிமைப்படுத்துவதற்கு வசதியாக, விருந்தினர் மாளிகைகள், பள்ளிகள் மற்றும் ஹோட்டல்களை கையகப்படுத்தியுள்ளோம்.
38 நாள் வெண்டிலேட்டரில் சிகிச்சை.. கொரோனாவில் இருந்து மீண்ட சமூகசெயற்பாட்டாளர்!
பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியும் டெல்லியில் காவலர் ஒருவர் எப்படி உயிரிழந்தார்?
டெல்லியில் உயிரிழந்த காவலரின் வீடு, சோனிபட் பகுதியில் உள்ளது. மே 4-ம் தேதி வரை அவர் அங்குதான் இருந்துள்ளனர். அதன்பின்னர் பணிக்குத் திரும்பியுள்ளார். அப்போது உடல்நலக்குறைவுடன் இருந்துள்ளார். இதுகுறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. மே 5-ம் தேதி இரவு அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடன் பணியாற்றிய சக காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை முன்னரே உயரதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தால், டெல்லி காவல்துறை அந்த காவலருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறுதுணையாக இருந்திருக்கும். எதிர்பாராத சம்பவங்கள் நடந்துவிட்டது. ஒரு மருத்துவமனையில் அவருக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறி இல்லை எனக் கூறியுள்ளனர். ஒருவேளை அப்போது அறிகுறிகள் தணிந்திருக்கலாம். ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். அது அந்த மருத்துவமனையின் குறைபாடு.
அரசு மதுக்கடைகளைத் திறக்க முடிவுசெய்தால், நான் போலீஸாரின் வாழ்க்கையை அபாயத்தில் தள்ள விரும்பவில்லை. மதுக்கடைகளுக்காக போலீஸாரின் உயிருடன் விளையாட நான் விரும்பவில்லை. 20 சதவிகித கடைகளை முதலில் திறக்கட்டும். கூட்டம் அதிகமாக இருக்கும் கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என நான் உத்தரவிட்டேன். போலீஸார்களின் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க முடியாது. எதற்கு எல்லோரும் இங்கு முண்டியடித்துகொண்டு இருக்க வேண்டும்… எதற்கு இங்கு இவ்வளவு கூட்டம் கூட வேண்டும்? இது ஒன்றும் கால்பந்து போட்டியல்ல. ஆன்லைன் டோக்கன் முறை சரியாக செயல்படுத்தப்பட்ட பின்னரே கடைகள் திறக்கப்படும்” என்று கூறியுள்ளார்.